பீஜிங் : சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 11 மாகாணங்களில் வெள்ளை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மியுன் புறநகர் பகுதியில் 4400-க்கும் மேற்பட்டோர் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார்கள் மற்றும் லாரிகள் வெள்ளத்தில் மிதந்து செல்கின்றன. குடியிருப்பு கட்டிடங்களும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகிறது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகி உள்ளன. மேலும் எட்டு பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பேஜிங் மற்றும் 11 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிக்கை அபாயம் அடுத்த மூன்று நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவின் கிழக்கே ஷான்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருவர் உயிரிழந்தனர்.
மேலும், 10 பேரை அடித்து செல்லப்பட்டது. இதேபோன்று சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் கார்கள் மலையில் இருந்து அடித்து செல்லப்பட்டதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு சீனாவில் வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.