கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த ரேகா (27) தனது கணவர் கணேஷுடன் (42) கடந்த 5 ஆண்டுகளாக திருமண வாழ்கை நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சமீப காலமாக ரேகா, வீட்டில் இருந்தபடியே அதிக நேரம் சமூக ஊடகங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பதில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்.
இதனால், குடும்ப பொறுப்புகள் மற்றும் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்தவில்லை என கணேஷ் பலமுறை குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கணேஷ் மற்றும் ரேகா இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, கோபத்தின் உச்சத்தில் இருந்த கணேஷ், தனது மனைவி ரேகாவை தாக்கியதாகவும், அந்த தாக்குதலின் விளைவாக ரேகா உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பின்னர் கணேஷ் தானாகவே வந்து காவல்துறையிடம் சரணடைந்தார். கணேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 302 – கொலை குற்றம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இச்சம்பவம் சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை தவறாக பயன்படுத்தினால் அது குடும்ப வாழ்வையே சீரழிக்கக்கூடியது என்பது இதன் மூலம் மீண்டும் தெரிய வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.