ராமநாதபுரம்: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேற்கு வடமேற்கு திசையில் மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் தேனி , தென்காசி,கோயம்புத்தூர், நெல்லை, சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் மற்றும் மேற்கு வங்கம் வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதால் மகாராஷ்டிரா மற்றும் கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகில் அரபிக்கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், எண்ணூர், நாகை, கடலூர், சென்னை, காரைக்கால், புதுவை, தூத்துக்குடி மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லுமாறு வலியுறுத்தியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.


