தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விக்கு விடை தேடி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்நிலையில், மலேசியாவில் நடைபெற்ற தனது ‘ஜனநாயகன்’ பட விழா மேடையில், இந்தக் கேள்விக்குத் தனது பாணியிலேயே சாமர்த்தியமான பதிலைக் கொடுத்துள்ளார் விஜய்.
கூட்டணி பற்றி விஜய்: மேடையில் பேசிய விஜய், “நிறைய பேர் என்கிட்ட கேக்குறாங்க.. விஜய் 2026-ல தனியா வருவாரா? இல்ல ஒரு அணியா வருவாரா? அப்படின்னு. அதுக்கு நான் சொல்ற பதில் ஒன்னு தான். நான் எப்போ தனியா இருந்தேன்? 33 வருஷமா நீங்க எல்லாம் என் கூடவே தான் இருக்கீங்க. உங்களை எல்லாம் கூட வச்சிருக்க நான் எப்படித் தனியா வர்றேன்னு சொல்ல முடியும்? நான் மக்களோட தான் இருக்கேன், மக்களோட தான் வருவேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
சஸ்பென்ஸ் வைத்த தளபதி: தொடர்ந்து கூட்டணி குறித்த நேரடியான பதிலைத் தவிர்த்த விஜய், “இப்போ கூடச் சிலர் யோசிப்பாங்க.. ‘என்ன இவன் இவ்வளவு பேசினாலும் தனியா வருவேனா இல்ல கூட்டணியோட வருவேனா-னு சரியா சொல்ல மாட்டேங்குறானே’ அப்படின்னு.. அதுக்குத் தான் சொல்றேன், எல்லாத்தையும் இப்போவே சொல்லிட்டா எப்படி? சஸ்பென்ஸ் ஒன்னு இருக்கணும்ல!” என்று சொல்லிச் சிரித்தார்.
விஜய்யின் அரசியல் வியூகம்: விஜய்யின் இந்தப் பேச்சு அவர் இப்போதைக்குத் தனது கூட்டணிக் கதவுகளை முழுமையாக மூடவில்லை என்பதையே காட்டுகிறது. “சஸ்பென்ஸ்” என்று அவர் குறிப்பிட்டது, வரும் காலத்தில் அதிரடியான கூட்டணிக் கணக்குகள் இருக்கலாம் என்பதற்கான குறியீடாகப் பார்க்கப்படுகிறது.
அரசியல் மேடைகளில் பேசுவதைப் போலவே, தனது சினிமா மேடையிலும் அரசியல் அனலைப் பறக்கவிட்டுள்ளார் விஜய். “நான் தனியா வரல, மக்களோட வர்றேன்” என்று அவர் சொன்னது, 2026 தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு அவர் தயாராகிவிட்டதையே உறுதி செய்கிறது.





