திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியில் நெஞ்சை பதறவைக்கும் குழந்தைக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் தொடங்கிய காதல் ஒரு குடும்பத்தையே அழிக்கக் காரணமாகியுள்ளது என்பதே அனைவரையும் கலங்கவைத்துள்ளது. 2020-ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக பாவி என்ற இளைஞர், அனிஷா என்ற பெண்ணுடன் பழகத் தொடங்கினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவாக வாழ முடிவு செய்தனர். ஆரம்பத்தில் எல்லாம் சீராக இருந்தாலும், குழந்தைகள் பிறந்ததும் அனிஷாவின் மனநிலை முற்றிலுமாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
2021-ம் ஆண்டு நவம்பரில் அனிஷா தனது முதல் ஆண் குழந்தைக்கு தாயானார். ஆனால் அந்தக் குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத காரணத்தால், கொடூரமாக கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதன் உடலை வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தார். அதிலும் முடிக்காமல், எட்டு மாதங்களுக்கு பிறகு அந்த குழந்தையின் எலும்புகளை தோண்டி எடுத்து பாவிக்கு கொடுத்து அழிக்கும்படி கூறியுள்ளார். இந்த கொடூரமான செயலுக்கு பாவியும் துணை புரிந்தார். அதனுடன் நிற்காமல், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனிஷா இரண்டாவது குழந்தை பெற்றதும், அதே மாதிரி அந்தக் குழந்தையையும் கொலை செய்துள்ளார். அந்த உடலையும் பாவி வீட்டின் பின்புறம் புதைத்து வைத்தார். மேலும் எட்டு மாதங்கள் கழித்து அந்த குழந்தையின் எலும்புகளையும் தோண்டி எடுத்தனர்.
இந்தக் கொலைகள் இரண்டும் பாவி மற்றும் அனிஷா இடையே மன அழுத்தத்தையும், தகராறையும் ஏற்படுத்தின. அனிஷா இவரை விட்டு விலக முயன்றதும் பாவியின் மனநிலை மேலும் பாதிக்கப் பட்டதாக தெரிகிறது. அதிகமான மன வேதனையில் குடிக்கு தன்னை அடிமைப்படுத்திக் கொண்ட பாவி, மனமுடைந்து குழந்தைகளின் எலும்புக்கூடுகளை எடுத்துக் கொண்டு நேரடியாக புதுக்காடு காவல் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். அவர் கொடுத்த தகவல்களில் இருந்து நடத்திய விசாரணையில், இரண்டு கொலைகளும் உண்மை எனவும், அதற்கான ஆதாரங்களும் கைவரிசையில் கிடைத்தன. போலீசார் இருவரையும் கைதுசெய்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் புதுக்காடு மட்டுமல்லாமல் திருச்சூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.