தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தனிப்பட்ட மாஸ் ஹீரோயினாக ரசிகர்களிடம் இடம்பிடித்தவர் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்கள் மூலம் வலுவான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வந்துள்ள படம் தான் காட்டி. இயக்குநர் கிரிஷ் இயக்கியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வெளியான முதல்நாளிலேயே விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் கலவையான கருத்துகளைப் பெற்றுள்ளது.
கதையின் சுருக்கம்: அனுஷ்கா, விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து காட்டுக்குள் இருந்து மூலிகைகள் மற்றும் மருந்துப் பொருட்களை வெளியில் கொண்டு வந்து விற்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அந்த வேலை சட்ட விரோதமாக மாறுகிறது. புது கும்பல் அதையே பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் போது, இருவரும் சிக்கலில் சிக்குகிறார்கள். இதன் நடுவே விக்ரம் பிரபு உயிரிழக்க, அனுஷ்கா பழிவாங்கும் போராட்டத்தில் களமிறங்குகிறார். முதல் பாதியில் மென்மையான காதல் காட்சிகள், இரண்டாம் பாதியில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் என இரண்டு வித முகத்தைக் காட்டியுள்ளார்.
குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதியில் பல எதிரிகளை தனியாக சமாளிக்கும் காட்சிகள், ரசிகர்களிடம் அருந்ததி அனுஷ்காவை நினைவுபடுத்தியுள்ளது. விக்ரம் பிரபுவின் பாத்திரம் குறுகியதாகவே இருந்தாலும், உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஜகபதிபாபுவின் கதாபாத்திரம் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படம் முழுவதும் வலுவாக இருந்தாலும், திரைக்கதை புதுமை அற்றதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனுஷ்காவின் மாஸ் ரீ-என்ட்ரிக்கு இந்த படம் மேடையை அமைத்தாலும், வலுவான கதைக்களம் இல்லாததால் அதிரடியான திரும்பி வரவாக மாறவில்லை என்று விமர்சனங்கள் கூறுகின்றன. படத்தின் ரேட்டிங்: 2.5 /5