காட்மாண்டு: நேபாளத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து “ஜென் சி” என்ற தலைமுறையினர் கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் தீ வைப்பு, அடிதடி என வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் துப்பாக்கி சூடு நடத்தியதில் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினர் மாணவர்கள் இளைஞர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வன்முறை வெடித்ததால் ஊரடங்கு உத்தரவிடப்பட்டது.
ஆங்காங்கே ராணுவ படையினர் குவிக்கப்பட்டு இருந்தது. போராட்டக்காரர்கள் வன்முறை தீவிரமடைந்ததால் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். நேற்று முன்தினம் இரவில் ராணுவம் நேபாளத்தை கட்டுப்படுத்தும் பணியில் பொறுப்பேற்றது. அதன்படி நேற்று மாலை 5 மணி வரை பாதுகாப்பு பணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.
இன்று அதிகாலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. பொது மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு ராணுவம் அறிவுறுத்தியது. போராட்டத்தில் தீவைப்பு, கொள்ளை போன்ற சமூகத்திற்கு விரோதமான செயல்களை தவிர்க்க இத்தகைய ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. முக்கியமான பகுதிகளில் தீவிரமாக ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக முக்கிய இடங்களில் மக்கள் கூடுவதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேபாளம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


