கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் மர்மமான முறையில் வானில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடும் பணி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்த மர்மங்களுக்கு மத்தியில் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மலேசிய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பை மலேசியப் போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
ஆழ்கடலில் புதிய தேடல் வேட்டை:
கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற போயிங் 777 ரக விமானமான MH370, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தெற்கு இந்தியப் பெருங்கடலை நோக்கித் திரும்பி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புதிய தேடல் பணியானது டிசம்பர் 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், இதில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ‘ஓஷன் இன்ஃபினிட்டி’ (Ocean Infinity) என்ற கடல்வழி ரோபோட்டிக் ஆய்வு நிறுவனம் ஈடுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் பணிக்கு ‘கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்’ (No-Find, No-Fee) என்ற கொள்கையின் அடிப்படையில் மலேசிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே சுமார் $70 மில்லியன் (சுமார் ₹580 கோடி) பணம் நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
இந்த முறை, நிபுணர்கள் அளித்த சமீபத்திய தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் தேடல் நடத்தப்படும். இந்த புதிய தேடுதல் முயற்சியானது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை மீண்டும் அளித்துள்ளது.


