ஒசூர் அருகே அஞ்செட்டி பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் ரோகித் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், இன்று காலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். மாவநட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் மற்றும் மஞ்சு தம்பதியரின் மகனான ரோகித், அஞ்செட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அக்கம் பக்கமாக தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், சிறுவனை சிலர் காரில் ஏற்றிச் சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரை கடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். பல மணி நேர தேடலுக்குப் பின், இன்று காலை அஞ்செட்டியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள கொண்டை ஊசி வளைவில், வனப்பகுதியில் சிறுவனின் சடலம் சாலை ஓரத்தில் கிடைத்தது. இந்த சம்பவம் கிராம மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்செட்டி பகுதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் பல மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு இளம்பெண் தனது காதலருடன் தனிமையில் இருந்ததைச் சிறுவன் பார்த்ததால், இது வெளிவந்துவிடக்கூடாது எனக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஊர் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனிடையே, போலீசார் 5 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடூர சம்பவம், கிராமத்தினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.