தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் கைவரிசை காட்டிய பிரபல கார் திருடன் சட்டேந்திரசிங் ஷெகாவத் கடந்த 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி, அதை விற்று ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூரில் வசிக்கும் 43 வயதுடைய எம்.பி.ஏ. பட்டதாரி. அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரிய வந்துள்ளது. நவீன கருவிகளை பயன்படுத்தி தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கார்களை திருடி வந்துள்ளார். திட்டமிட்டு கார்களை அடையாளம் காண்பதிலும், அவற்றை திறமையாக திருடுவதிலும் வல்லவராக இருந்தவர். கடந்த இருபது ஆண்டுகளாக சாலை வழியாக திருடிய கார்களை ராஜஸ்தான் மற்றும் நேபாளம் வரை கொண்டு சென்று விற்று வந்திருக்கிறார்.
அந்த வருமானத்தைக் கொண்டு சொகுசாக வாழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் போலீஸிடம் சிக்க காரணமான சம்பவம் சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது தான். அங்குள்ள கதிரவன் காலனியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் என்பவர் கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்தார். அதிகாலை நேரத்தில் வந்த மர்ம நபர், நவீன கருவிகளை கொண்டு காரை திறந்து மிகச் சுலபமாக திருடிச் சென்றார். கார் திருடப்பட்டதைக் கண்ட எத்திராஜ் அதிர்ச்சி அடைந்து, அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். சென்னை திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருடனை தேட தொடங்கினர். அதன்படி, அவருடைய கண்காணிப்பு காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், திருடனை புதுச்சேரியில் கைது செய்தனர். அவரை கைது செய்த பிறகு சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் தான் சட்டேந்திரசிங் ஷெகாவத் என்றும், பல மாநிலங்களில் கார்கள் திருடிய விவரங்களும் தெரிந்தன. இதையடுத்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர் தான் தங்களுடைய காரை திருடி இருப்பார் என சந்தேகிக்கும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள், சென்னை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கார்களை மீட்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.