டாக்கா: வங்காள தேசத்தில் விமானப்படை பயிற்சியில் ஈடுபட்ட போது f7 பி ஜி ஐ என்ற விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சிக்கு விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த விமானமானது டாக்கா அருகே அமைந்துள்ள உத்தாரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் மீது விழுந்து தீ பற்றியது.
இந்த கோர விமான விபத்தின் போது விமானி மற்றும் 20 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், விமானத்திலிருந்து விமானி லெப்டினன்ட் முகமது டோகிர் இஸ்லாம் என்பது தெரிய வந்தது. விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 31 ஆக அதிகரித்துள்ளது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.
அதன்படி பலியானவர்களில் 25 பேர் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதில் பெரும்பாலானவர்கள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 125 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமா? என்ற அபாயம் உள்ளது. மேலும், விபத்தில் சிக்கிக் கொண்ட குழந்தைகளின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் உடல்களை பெறுவதற்கு மருத்துவமனைகளில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
பலியானவர்களின் தகவல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மேலும், விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய வங்கதேச விமானப்படையால் உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.