8 மாத சிசுவும் தாயும் ஆற்றில் சடலமாக மீட்பு!! கொலையா?? தற்கொலையா??

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி கரையோரத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மற்றும் 8 மாத பெண் கைக்குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் இருந்து குமாரபாளையம் சாலை அக்ரஹாரம் பகுதியில் காவிரி ஆற்றில் பெண் மற்றும் குழந்தை சடலமாக மிதந்து வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இரு சடலங்களையும் கரைக்கு கொண்டு வந்து கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் காவிரி ஆற்றில் இறங்குவதற்கான வசதி இல்லாததால், இளம்பெண் குழந்தையுடன் வேறு ஏதாவது இடத்தில் இருந்து ஆற்றில் இறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள் அக்ரஹாரம் பகுதி காவிரி கரையோரத்தில் கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதால், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.

இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறுதலாக நீரில் விழுந்து உயிரிழந்தாரா என்ற இரு கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சடலங்களின் அடையாளம் கண்டறியப்பட்ட பின்னரே சம்பவத்தின் முழு பின்னணி தெரியவரும் என கூறப்படுகிறது. தாய் மற்றும் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் காவிரி கரையோர மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram