முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான நடிகர் மு.க. முத்து (77) இன்று சென்னையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சமீப காலத்தில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1970களில் தந்தை கருணாநிதியின் கலைத் தலைமையில் திரையுலகில் தனது முதல் பயணத்தைத் தொடங்கிய மு.க. முத்து, ‘பிள்ளையோ பிள்ளை’, ‘பூக்காரி’, ‘சமையல்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். திரையுலகில் எம்ஜிஆர்-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் பின்னணிப் பாடகராகவும், சில பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
அரசியலிலும் தந்தைக்கு பின் நடக்க முயன்ற அவருக்கு தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அரசியல் செயலில் இருந்து விலகினார். 2008ஆம் ஆண்டு ‘மாட்டுத்தாவணி’ படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் பாடிய அவர், பின்னர் திரையுலகிலும் இருந்து ஒதுங்கி தனிமையான வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவரது உடல் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள், திரையுலகினர், திமுக நிர்வாகிகள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மு.க. முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகனும் தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். அவரது மறைவு தமிழக அரசியல் வரலாற்றிலும் திரையுலகிலும் மறக்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.