தர்மபுரி அருகே அரிவுறை அடுத்த கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரசூல். ஓட்டுநராகவும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். ரசூலுக்கும் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த அம்முபிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அந்த வீட்டில் அமைதி நிலவியதுபோல் தெரிந்தாலும், பின்னால் நடந்தது வேறு காதல் கதை. அம்முபி, அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வந்த லோகேஸ்வரனுடன் முறையற்ற உறவில் ஈடுபட்டிருந்தார். இது பற்றி ரசூலுக்கு தெரிய வந்ததும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கடந்த ஐந்தாம் தேதி இரவு ரசூல் அம்முபி கொடுத்த மாதுளை ஜூஸ் குடித்தார். ஜூஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியாமல் ரசூல் குடித்தார். பின்னர் அவர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் ரசூலின் ரத்தத்தில் விஷப் பொருள் இருப்பதை கண்டுபிடித்தனர். போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர். அம்முபியின் செல்போனை சோதனையிட்டதில், லோகேஸ்வரனுடன் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. மேலும், ஆசையை நிறைவேற்ற ரசூலை எப்படி முடிக்கலாம் என்று இவர்கள் பேசிக்கொண்டிருந்தது ஆடியோ ரெக்கார்டில் கிடைத்தது. விசாரணையில் அம்முபி, லோகேஸ்வரன் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ரசூலை கொல்ல அம்முபி, லோகேஸ்வரனின் ஆலோசனைப்படி முதலில் உணவில் பூச்சிக்கொல்லி கலந்தார். அது வெற்றியடையாமல் போக, மாதுளை ஜூஸில் கலந்தார். மேலும் சிகிச்சைக்காக ரசூல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்ட இந்த சம்பவத்தில் அம்முபி, லோகேஸ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தம்பதிக்குள் நம்பிக்கையை இழந்த இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.