திருவள்ளூர் மாவட்டத்தில் நேர்ந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி, வழியில் மர்ம நபரால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். அதன் பின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வழக்கமான பள்ளி விடும் நேரம் மதியம் 3 மணியாக இருந்தும், அந்த நாளில் 12 மணிக்கே பள்ளி விடுவிக்கப்பட்டதால், சிறுமி தனது பாட்டி வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. அந்த சிறுமி பேருந்து வசதி இல்லாததால் நடக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அப்போது அவளை யாரோ ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின் அவளின் வாயை கைகளால் மூடி ஆள் இல்லாத இடத்துக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
அந்த சிறுமியை அரைமணி நேரத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி தப்பிக்க முயற்சித்த போதும், அந்த நபர் மீண்டும் துரத்தி சென்று, அவளை பிடித்து அடித்து வன்கொடுமை செய்துள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின் சிறுமி, முகம் முழுவதும் ரத்தமுடன் வீட்டுக்கு வந்து அழுதார். சிறுமி கதறி அழுததைக் கண்ட பெற்றோர் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது அந்த சிறுமி “அவர் என்னை அடிச்சான், ப்ளீஸ் அங்கிள் என்கிட்ட வாராதீங்கன்னு சொன்னேன், ஆனா அவர் கத்தினா உன்ன கொலை பண்ணிருவேன் அப்படினு மிரட்டினாரு” என்று பெற்றோரிடம் கூறினாள். சிறுமியின் இந்த வாக்குமூலம் நெஞ்சை பதற செய்கிறது. சிறுமியின் தாய், குற்றவாளியை சட்டம் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என ஆ தெரிவித்தார். சிசிடிவி காட்சியில் அந்த நபர் சிறுமியை பின்தொடர்வதும், தூக்கிக்கொண்டு ஓடுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இது நடந்து ஒரு வாரமாகியும் குற்றவாளி பிடிபடாமல் இருப்பது பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அதிருப்திக்கு வழிவகுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூகத்தையே உச்சக்கட்ட கேள்விக்கு உள்ளாக்குகிறது.