இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டரில் ஜூலை 23 அன்று தொடங்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட வெட்டு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவரது காயம் குணமடைய குறைந்தது 10 நாட்கள் ஆகும் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்புக்கும் இடுப்புப் பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவரும் நான்காவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே.
இந்த சூழ்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக 24 வயதான ஹரியானா பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் அணியில் இடம்பிடித்துள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ‘ஏ’ அணியில் சிறப்பாக செயல்பட்டு, 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும், 24 முதல்தர போட்டிகளில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடி வருகிறார்.
தற்போது இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிப்பதால், இந்திய அணி நான்காவது டெஸ்டில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அன்ஷுல் கம்போஜின் வருகை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது டெஸ்ட் அறிமுகத்தை இந்த போட்டியிலேயே பெற வாய்ப்புள்ளது.