விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சார்பில் ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று ஆவேசமான முறையில் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது:
“தமிழகத்தின் மிகப்பெரிய சமூகமாக வன்னியர்கள் உள்ளனர். இவர்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் வாழ்கிறார்கள். இந்த சமூகத்தை முன்னேற்ற எந்த நடவடிக்கையும் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுக்கவில்லை. வன்னியர்களின் வாக்குகள் மட்டுமே தேவையென்று நினைக்கும் ஆட்சிதான் இது. வன்னியர்கள் கல்வி பயிலக்கூடாது, முன்னேறக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஸ்டாலின் அரசு காட்டுகிறது,” என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 1208 நாட்கள் ஆகிவிட்டன. சாதி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் எங்கும் கூறவில்லை. தரவுகளை கொண்டு இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த வேண்டும் என்று தான் உத்தரவிட்டது. கர்நாடகா, தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதி கணக்கெடுப்பு நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் அது நடக்கவில்லை ? ஸ்டாலின் உடனடியாக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்து, “மகாத்மா காந்தி 32 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தார். ஆனால், ராமதாஸ் அய்யா 45 ஆண்டுகளாக போராடியும் வன்னியர்களுக்கு உரிய உரிமை கிடைக்கவில்லை. திமுகவில் 23 எம்.எல்.ஏக்கள், 5 எம்.பிக்கள் வன்னியர்கள். ஆனால் இவர்களில் யாராவது ஒருவர் கூட இடஒதுக்கீட்டை கோரி முதலமைச்சரிடம் பேசியுள்ளார்களா? சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தால், சட்டமன்றத்திற்குள் செல்லமாட்டோம் என்று அவர்கள் கூற முடியுமா?” என்றார். அவரது உரையின் முடிவில், “உங்கள் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு அழுத்தம் கொடுங்கள். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காத அரசு ஸ்டாலின் அரசே. இடஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்காத பட்சத்தில், அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.