டிரம்ப் நடவடிக்கையால் இந்தியா தடுமாறும் நிலை அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி ஏற்ற உடனே உலக பொருளாதாரம் பெரும் அதிர்வில் சிக்கியுள்ளது. தனக்கு எப்போதுமே அரசியல் தொழிலதிபர் முகமே முக்கியம் என்ற டிரம்ப், அமெரிக்க வருவாயை அதிகரிக்க புதிய வரி சட்டங்களை கொண்டு வருகிறார்.
ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் நிற்காத நிலையில், ரஷ்யாவுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், ரஷ்யாவுடன் வணிகம் செய்வதற்கும் கூடுதல் வரி சுமத்தப்படும் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தற்போது தனது கச்சா எண்ணெய் தேவையில் 40% அளவுக்கு ரஷ்யாவை நம்பியுள்ளது. காரணம் ரஷ்யா உலக சந்தையில் குறைந்த விலையில் எண்ணெய் தருகிறது. ஆனால் அமெரிக்காவின் புதிய வரி உத்தரவு அமல்படுத்தப்பட்டால், ரஷ்யா மூலம் எண்ணெய் வாங்குவது கடினமாகும். இதனால் இந்தியா மற்ற நாடுகளை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதற்கான மாற்று விநியோகம் குறைவாக இருப்பதால், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும். ரஷ்யா சந்தையில் இருந்து வெளியேறும்பட்சத்தில், உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை $130 – $140 வரை செல்லும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் நேரடியாக இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையை பாதிக்கும்.
இன்று நிலவும் சராசரி விலை நிலவரப்படி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், நம்மிடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை கூடும் என்று அரசு கணிக்கிறது. இந்தியா முன்னதாக 27 நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கி வந்தது. தற்போது அது 40 நாடுகளாக விரிந்துள்ளது. ரஷ்யா மீது தடை வலுப்படுகிற சூழலில், எங்கு மலிவாக எண்ணெய் கிடைக்கிறதோ, அங்கிருந்து இறக்குமதி செய்வது தான் தற்போதைய திட்டம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியும் தொடர்கிறது.