முகலாய ஆட்சியாளர்கள் தொடர்பான ஒரு புதிய சர்ச்சை தற்போது கல்வித்துறையில் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி (NCERT) அமைப்பின் புதிய பாடத்திட்டம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள வரலாற்றுப் புத்தகத்தில் முகலாய அரசர்கள் குறித்து குறிப்பிடப்பட்ட விதம், நாடு முழுவதும் பல விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக பாபர், அக்பர், ஔரங்கசீப் ஆகியோர் கோயில்களை அழித்தவர்கள் என்றும், வெகுஜனக் கொலைகாரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர், மண்டை ஓடு கோபுரங்களை அமைத்து கொடூரமான ஆட்சி நடத்தி உள்ளார் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அக்பர், மத அடிப்படையிலான கொடூர நடவடிக்கைகளை மேற்கொண்டார் என புத்தகத்தில் உள்ளது. ஔரங்கசீப் மதுரா, பனாரஸ், சோம்நாத் போன்ற பிரபலமான இந்துக் கோயில்களையும், சீக்கிய மற்றும் சமண மத நிறுவனங்களை அழித்ததாக புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாடநூல்கள் எந்தவொரு தனிப்பட்ட பார்வையிலோ உருவாக்கப்படவில்லை. அவை ஆதாரங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டவை என NCERT அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, 7-ம் வகுப்பு வரலாற்று நூல்களில் இருந்த முகலாயர் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களைப் பற்றிய பாகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் கல்வியில் புதிய பார்வையை உருவாக்குகின்றனவா? அல்லது வரலாற்றினை மாற்றுகிறதா? என்று பலரும் விவாதித்து வருகின்றனர். இந்த விவாதம் தற்போது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.