மான்செஸ்டர், இங்கிலாந்து: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், உடைந்த கால் விரல் வலியையும் பொருட்படுத்தாமல் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நாள் ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் வலது கால் விரலில் பலத்த அடிபட்ட பண்ட், மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டது. ஆறு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தபோது, யாருமே எதிர்பார்க்காத வகையில், வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு பண்ட் மீண்டும் களமிறங்கினார். அவரது இந்த துணிச்சலான முடிவால், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி பெரும் வரவேற்பு அளித்தனர்.
காயம் இருந்தபோதிலும், பண்ட் துணிச்சலுடன் விளையாடி 75 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். இதன் மூலம் வீரேந்திர சேவாக்கின் டெஸ்ட் சிக்ஸர் சாதனையை சமன் செய்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவரது இந்த அசாத்திய அர்ப்பணிப்புக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


