சென்னை: “உரிமை மீட்க, தலைமுறையைக் காக்க” என்ற பெயரில் அன்புமணி நேற்று நடைப்பயணத்தை தொடங்கியுள்ளார். செங்கல்பட்டு திருப்போரூர் முதல் தருமபுரி வரை நடை பெற உள்ளது. இந்த நடை பயணத்திற்காக “பயணம் பயணம் உரிமைப் பயணம் பெறுவோம் பெறுவோம் புறப்படுடா” என்ற பரப்புரை பாடல் ஒன்றினை நேற்று வெளியிட்டார். இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் பங்கேற்று நடை பயணத்தை மேற்கொண்டனர்.
நடை பயணத்தை தொடர்ந்து பொதுக் கூட்ட மேடையில் பேசிய அன்புமணி கூறியதாவது, ராமதாஸின் கொள்கைகளை நிறைவேற்ற நடைபயணத்தை தொடங்கியதாக கூறினார். அன்புமணியின் நடை பயணத்தால் வட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
மேலும், “நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது” என டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அன்புமணி ஏற்பாடு செய்திருந்த நடை பயணத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து எஸ்பிகள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், அன்புமணியின் தமிழக உரிமை மீட்பு பயணத்திற்கு தடை எதுவும் இல்லை, அவரது நடை பயணம் எந்தவித தடையும் இன்றி திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஊடகங்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.