நகரி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் மியாப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதிகள் விஜய் நாயக்–சின்மயி. இவர்களுக்கு ஹன்சிகா என்ற மகள் உள்ளார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் ஹன்சிகா.
நேற்று முன்தினம் தேர்வு எழுத சென்றபோது பள்ளி நிர்வாகம் அனுமதிக்காததால் வீடு திரும்பி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமியின் திடீர் தற்கொலை செய்து கொண்ட காரணம் எதுவும் கிடைக்கவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார். மியா பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சனையா? அல்லது காதல் விவகாரம் காரணமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹன்சிகாவுக்கு முன் சக மாணவன் கடந்த வாரம் பள்ளியில் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷேக் ரிஸ்வான் என்பவருடன் சமூக வலைதளத்தில் ஹன்சிகா பழகி வந்தது ஆசிரியருக்கு தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் ஆசிரியை கூறியுள்ளார்.
சம்பவத்தன்று மாணவனின் தாயாரை பள்ளியில் வைத்து பேசி கொண்டிருந்தபோது மாணவன் ஷேக் ரிஸ்வான் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷேக் ரிஸ்வானை தொடர்ந்து ஹன்சிகாவும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் தற்கொலையை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.