பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பணத்திற்காக 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். பெங்களூர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரகெரே பகுதியில் வசித்து வந்த அச்சுதா மற்றும் ஹூலிமாவு தம்பதிகளின் மகன் நிஷித்.
13 வயது சிறுவன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி வழக்கம் போல் டியூஷன் சென்றுள்ளார். டியூஷனிலிருந்து வீடு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். வெகு நேரமாகியும் நிஷித் வீடு திரும்பாததால் பயந்து போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணையின் போது நேற்று மாலை பன்னீர்ஹட்டா–கோட்டிகெர் சாலையில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வந்த சிறுவனின் வீட்டில் பகுதி நேர ஓட்டுனராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பது தெரிய வந்தது. மேலும், அவருக்கு துணையாக கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் கடத்தல் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் கைது செய்ய சென்ற போது குற்றவாளிகள் தப்பிக்க முயற்சி செய்தனர்.
வேறு வழி இல்லாமல் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காலில் காயங்களுடன் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர். 13 வயது சிறுவனை ரூ.5 லட்சத்திற்கு கடத்திய எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.