வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதை கடுமையாக விமர்சித்து, இந்தியாவின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அச்சுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து அமெரிக்கா யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குவது குறித்த கேள்விக்கு “எனக்கு எதுவும் தெரியாது” என்று பதில் அளித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் மலிவான கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதனை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தியா, ரஷ்யாவின் போருக்கு நிதி அளிப்பதாகவும், பெரும் லாபம் ஈட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை “மிகவும் கணிசமாக” உயர்த்துவதாக அச்சுறுத்தினார்.
டிரம்பின் இந்த விமர்சனங்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் வலுவான பதிலடி கொடுத்தது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யவே ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், இது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முக்கியமானது என்றும் தெரிவித்தது. மேலும், இந்தியாவை விமர்சிக்கும் பல நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்களும் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருவதாக இந்தியா சுட்டிக்காட்டியது.
இந்தச் சூழலில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒரு செய்தியாளர், “இந்தியா, அமெரிக்கா ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் மற்றும் உரங்களை வாங்குகிறது என்று கூறுகிறது. அதேசமயம் இந்தியாவை ரஷ்ய எரிசக்தி வாங்குவதற்காக விமர்சிக்கிறீர்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு டிரம்ப், “எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் அதைச் சரிபார்க்க வேண்டும்” என்று பதிலளித்தார். இந்த பதில் சமூக வலைத்தளங்களில் பரவி, அமெரிக்காவின் ‘இரட்டை நிலை’ குறித்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போருக்குப் பிறகு, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இருப்பினும், ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை தள்ளுபடி விலையில் விற்பனை செய்ததால், இந்தியா அதிக அளவில் அதை வாங்கத் தொடங்கியது. அதே சமயம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவையும் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து சில குறிப்பிட்ட பொருட்கள், குறிப்பாக யுரேனியம், உரங்கள் மற்றும் பிற இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த இரட்டை நிலையை இந்தியா நீண்ட நாட்களாக விமர்சித்து வருகிறது.