பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், தற்போது டெல்லியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2021-ஆம் ஆண்டு, நடிகை மீரா மிதுன் சமூக வலைதளங்களில் பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட மீரா மிதுன், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆனால், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அவரது தாயாரும், மீரா மிதுனை மீட்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், டெல்லியில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீரா மிதுன், ஆகஸ்ட் 11-ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அவர் தற்போது கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதால், டெல்லியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனவே, அவரை சென்னைக்கு அழைத்து வர இயலவில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.