சென்னை: சென்னை அரும்பாக்கம் வீரபாண்டி நகர் 1 ம் தெருவில் மழைநீர் வடிகால் பள்ளம் திறந்திருந்ததால் பெண் விழுந்து இறந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சூளைமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து பெண்ணின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் சென்னை, கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீபா என்பவர் என தெரியவந்தது. மேலும், மூடப்படாத வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தலையில் மற்றும் முகத்தில் அடிபட்டதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்க கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு 12:30 மணி அளவில் விழுந்ததன் பிறகு 1 மணி அளவில் உயிர் பிரிந்துள்ளது என பிரேத பரிசோதனை கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தில் விழுந்ததால் நெற்றியில் காயம் ஏற்பட்டு பின் உயிரிழந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. சரிவர மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தால் பெண் உயிரிழந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டதாவது, “மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பின் அரை மணி நேரமாக உயிருக்கு போராடி பின் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. 95%,97% மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டது என தமிழக அரசு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழக அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் உயிரிழந்த பெண்ணுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? இதுபோன்று ஆண்டுதோறும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிகழ்வுகள் எல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று ஸ்டாலின் சொல்வாரா? மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை. மழை நீர் வடிந்த பாடில்லை. அப்பாவிகளின் உயிர் போவது தான் மிச்சம். அதை தடுப்பதற்கான உருப்படியான வழி இல்லை. இது பன்ற ஆட்சி இருந்து என்ன பயன். திமுக அரசு தீபா உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். இனியாவது மழைநீர் வடிகால் பணிகளை பாதுகாப்புடன் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.