சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைத்தால் தான் அதிமுக வெற்றி பெறும். “மறப்போம் மன்னிப்போம்” என்று கட்சியை விட்டு வெளியேறியவர்களை அரவணைக்க வேண்டும்.
2026 இந்த தேர்தல் நேரத்தில் வெளியேறியவர்களை அதிமுகவில் ஒருங்கிணைப்பது முக்கியம் வாய்ந்தது. தொண்டர்களின் விருப்பமும் இதுவே. பத்து நாட்களில் பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். வெளியேறியவர்களை அதிமுகவில் மீண்டும் ஒருங்கிணைத்தால் தான் நான் முழுமையாக கட்சியில் செயல்படுவேன். கட்சிக்காக பாடுபடுவேன்.
அதிமுக ஒருங்கிணைப்பு நடந்தால்தான் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி பணியாற்றுவேன் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், கே பி முனுசாமி மற்றும் வேலுமணி ஆகியோருடன் திண்டுக்கல்லில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பதவி நீக்கம் செய்யப் போவதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
அதில் கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சி தமிழர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு என தொடங்கியிருந்த அறிக்கையில் அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளராக இருக்கும் திரு.கே. செங்கோட்டையன் MLA அவர்கள் இன்று முதல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என வெளியிடப்பட்டிருந்தது. மேலும் செங்கோட்டையனின் ஆதார்வாளார்கள் இருப்பின் அவர்களது பதவிகளும் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) K.A.சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு எம் ஈஸ்வரமூர்த்தி, கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் என் டி குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு எம் தேவராஜ், அத்தாணி பேரூராட்சி கழகச் செயலாளர் திரு எஸ் எஸ் ரமேஷ், துணைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் திரு. வேலு, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் திரு.கே.எஸ் மோகன் குமார் ஆகியோரும் இன்று முதல் அவர்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.