சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராசி திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை புளூசட்டை மாறன் வெளியிட்டுள்ளார். படத்தின் கதைப்படி, தமிழ்நாட்டில் ஆயுத கலாச்சாரத்தை வளர்க்க முயலும் குழுவைத் தடுக்க NIA அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சியின் போது, சூசைட் கமாண்டோவை பலி கொடுப்பதற்குப பதிலாக, காதலில் தோல்வியுற்று தற்கொலை செய்ய நினைக்கும் ஹீரோவை பயன்படுத்துகின்றனர்.
புளூசட்டை மாறனின் கருத்துப்படி, இப்படத்தின் கதை எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை. அவர் கூறியதாவது:
“முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இடைவேளைக்கு பிறகு கதை நீளமாகி சலிப்பை ஏற்படுத்தியது. வில்லன் கேரக்டர் பலமாக இல்லாததால், ஹீரோ-வில்லன் மோதலுக்கு எந்த ஆர்வமும் உருவாகவில்லை. ஹீரோவின் ஃபிளாஷ்பேக் காட்சியும் பயனற்றதாக போய்விட்டது” என்றார்.
அதே நேரத்தில், படத்தில் தேவையற்ற காமெடி டிராக் சேர்க்கப்படவில்லை என்பதையே ஒரு நல்ல அம்சமாக அவர் குறிப்பிட்டார். ஆனால், “துப்பாக்கியால் சுட்டாலும் யாரும் சாகவில்லை; அடுத்த காட்சியிலேயே எழுந்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் உண்மையில் துப்பாக்கி தேவையா? பொம்மை துப்பாக்கிதான் போதுமே” என்று தனது சாடல் பாணியில் விமர்சித்தார்.
மொத்தத்தில், “மதராசி” திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செம்மையாக அமையவில்லை. சுமாரான படமாகவே முடிந்துவிட்டதாக புளூசட்டை மாறன் கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ப்தியை உருவாக்கி உள்ளது.