சென்னை கோயம்பேடு வெங்காய மண்டி பேருந்து நிலையத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 14ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வரலட்சுமி (50) பேருந்தில் பயணம் செய்து கோயம்பேடு பகுதியில் இறங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு வந்தபோது தனது பைகளைத் திறந்து பார்த்த அவர், அதிர்ச்சியடைந்தார். ஏனெனில், அதில் இருந்த 4 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. உடனே அவர் அருகிலுள்ள இடங்களில் தேடியும், எந்த தகவலும் கிடைக்காததால், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நகையை எடுத்தவர் வேறு யாருமல்ல, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர், திமுகவைச் சேர்ந்த பாரதி (56) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாரதியை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் மீது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒருவர் இப்படிப் பட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. மேலும், ஏற்கனவே அதிகரித்து வரும் செயின் பறிப்பு மற்றும் நகை திருட்டு சம்பவங்களுக்கு இந்த வழக்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. போலீசார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாகவும், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் தப்ப முடியாது என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.