நேபாளத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள் மற்றும் ஸ்திரமற்ற சூழலுக்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிதான் அடிப்படைக் காரணம் என்று பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸின் கடந்தகால கொள்கைகளும், நேபாள விவகாரங்களில் அக்கட்சி பின்பற்றிய அணுகுமுறைகளும் தான் தற்போதைய சூழலுக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
சௌத்ரி தனது குற்றச்சாட்டை விளக்கும் போது, நேபாளத்தின் அரசியல் வரலாற்றை நினைவு கூர்ந்தார். “காங்கிரஸ் ஆட்சி காலத்தில், நேபாளத்தில் இருந்த மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நேபாள அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி, மன்னராட்சிக்கு எதிராகப் போரிட காங்கிரஸால் உந்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அங்குப் பல ஆண்டுகள் உள்நாட்டுப் போர் நிலவி, இறுதியில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது.” என்று அவர் கூறினார்.
மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர், நேபாளத்தில் நிலையான ஆட்சி அமையாமல் பல்வேறு அரசியல் சக்திகளுக்கிடையே போட்டி நிலவி வருவதாக சௌத்ரி சுட்டிக்காட்டினார். “நேபாளத்தில் மன்னராட்சி அகற்றப்பட்ட பின்னர், நிலையான அரசாங்கம் அமையவில்லை. இதன் விளைவாக, அண்டை நாடான சீனா அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. நேபாளத்தின் அரசியலிலும், பொருளாதாரத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததற்கு காங்கிரஸின் தவறான கொள்கைகளே முழுமுதற் காரணம்,” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
மேலும், நேபாளத்தின் அரசியல் ஸ்திரத்தன்மை குலைந்தது முதல், அங்குத் தற்போதுள்ள சீன ஆதரவு நிலைப்பாடுகள் வரை அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறைகளே பிரதான காரணம் என்றும் சௌத்ரி குற்றம் சாட்டினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நேபாளத்துடனான உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய மற்றும் கலாச்சார பிணைப்புகளைப் புதுப்பிக்கவும் பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


