கரூர் மாவட்டத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 38 பேர் உயிரிழந்தது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று (செப்டம்பர் 27) கரூர் 100 அடி சாலையில் விஜய் தலைமையில் நடந்த பரப்புரைக்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போனதில் பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். அதில் 38 பேர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து அறிந்தவுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் புறப்பட்டு சென்றார்.
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கரூரில் நடந்தது விவரிக்க முடியாத ஒரு துயரம். நான் இதற்காக மிகுந்த வேதனையில் இருக்கிறேன். நேற்று இரவே செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டேன். இது போன்ற சம்பவம் இனி ஒருபோதும் நடக்கக் கூடாது என்றார். இந்த சம்பவத்தைப் பற்றி உண்மை வெளிக்கொணர, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்:
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இந்த துயர சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மனம் நொந்துள்ளனர். சிலர் கூட்ட நெரிசலை தவிர்க்க சரியான ஏற்பாடுகள் ஏன் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.


