கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் பெரும் சோகமாக முடிந்தது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துயரச் செய்தி குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் வெளியிடப்பட்ட அரசாணையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை, காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கரூர் நேரில் சென்று, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.


