விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடா?? பாதியிலேயே எழுந்து சென்ற டிஜிபி வெங்கட்ராமன்!!

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தமிழகத்தையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த சோகமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. அதில் 10 சிறுவர்கள் மற்றும் 16 பெண்கள் அடக்கம் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமன் சென்னையில் நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். ஆரம்பத்தில் 38 பேர் உயிரிழந்ததாக அவர் கூறியிருந்த நிலையில், பின்னர் அது 39 ஆக உயர்ந்தது.

டிஜிபி வெங்கட்ராமன் கூறுகையில்,

கரூரில் தவெக சார்பில் முந்தைய கூட்டம் குறைந்த அளவில் நடந்தது. ஆனால், இம்முறை எதிர்பாராத அளவில் மிகப்பெரிய கூட்டம் திரண்டது. தவெக கேட்ட இடமான லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிகள் குறுகியவை என்பதால், வேலுச்சாமிபுரம் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது,” எனத் தெரிவித்தார். சம்பவத்தை அடுத்து கரூரில் 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், நிகழ்வுநாளில் கூட்டநெரிசல் பகுதிக்கு வெறும் 500 போலீசாரே பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த இடத்தில் 500 பேருக்கு மேல் போலீசார் நிற்க முடியாது. தொண்டர்களுக்கான இடமும் குறையும், என்று டிஜிபி விளக்கமளித்தார். தவெக தரப்பில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டத்திற்கான அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் காலை 11 மணி முதலே அங்கேயே இருந்ததாகவும், 12 மணிக்கு வருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் மாலை 7 மணிக்குப் பிறகே வந்ததாகவும் டிஜிபி தெரிவித்தார்.

கட்சித் தொண்டர்கள் ஒத்துழைத்து சீராக நடத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது, என அவர் குறிப்பிட்டார். கரூரில் விஜய் கூட்டத்தில் காவல்துறை பாதுகாப்பு குறைபாடா என்ற கேள்விக்கு டிஜிபி நேரடியாக பதிலளிக்க மறுத்தார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது, என்றார். ஆனால், செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க முனைந்தபோது, டிஜிபி பாதியிலேயே எழுந்து சென்றது செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவா அல்லது கூட்ட நெரிசலின் விளைவா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான பதிலை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram