கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட துயர விபத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கரூருக்கு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரும் உடன் சென்றனர். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:
விஜய் பரப்புரை தொடங்கிய சில நிமிடங்களுக்குள்ளேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மின்விளக்குகள் அணைந்ததால், கூட்ட நெரிசல் அதிகரித்து பலர் உயிரிழந்தனர் என ஊடகங்கள் கூறுகின்றன. இத்தகைய பெரும் கூட்டங்கள் நடைபெறும்போது, அரசு மற்றும் காவல்துறை முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு நான்கு மாவட்டங்களில் விஜயின் கூட்டங்கள் நடந்துள்ளன. அதைப் பார்த்து அனுபவம் பெற்றிருந்தும், பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்பட்டுள்ளது. தொலைக்காட்சி காட்சிகளிலேயே பாதுகாப்பு குறைபாடு தெளிவாகத் தெரிகிறது. அதிமுக எழுச்சி பயணத்தின் போது கூட முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ஆளும் கட்சியின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இது அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ட நடத்தை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசாங்கம் நடுநிலையாக நடக்க வேண்டும். ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என வேறுபாடு காட்டக் கூடாது, என அவர் வலியுறுத்தினார். மேலும், விஜய் குறித்து அவர் கூறியதாவது:
ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் நடத்தும் முன் நிலைமையை ஆராய்ந்து ஆலோசனை செய்திருக்க வேண்டும். நேரம் தாமதமாகும் போது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற துயரங்கள் ஏற்படாதவாறு முன் திட்டமிடல் அவசியம், என்றார். அத்துடன், “இந்தியாவிலேயே ஒரு அரசியல் கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறை. இது எந்தக் கட்சியைக் குற்றம் சாட்டும் விஷயம் அல்ல; ஆனால், பாதுகாப்பு குறைபாடு என்பது மறுக்க முடியாத உண்மை,” எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் உடனடியாக கமிஷன் அமைத்ததையும் சந்தேகத்துடன் கூறினார். இவ்வளவு வேகமாக கமிஷன் அமைத்ததன் பின்னணி என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இழப்பீடு வழங்குவது அரசாங்கத்தின் கடமைதான் எந்த ஆட்சியும் இதை செய்திருக்கும், என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.


