கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தவெக சார்பில் அந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவில் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. கரூர் கூட்ட நெரிசலில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், திமுக அமைச்சரான செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், சம்பவத்துக்கு முன்பே மின்தடை ஏற்பாடு செய்யப்பட்டதும், மருத்துவமனைகள் தயார் நிலையில் இருந்ததும் சதியாக திட்டமிடப்பட்டதை சுட்டிக்காட்டுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதோடு, “குண்டர்கள் சேர்ந்து இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும்” என ஆதவ் அர்ஜுனா கோரியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜயும், நானும் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும். எங்களுக்குத் தடை விதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் போது முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், என மனுவில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. “செந்தில் பாலாஜி தொடர்பு” என்ற குற்றச்சாட்டு மீண்டும் கரூர் துயரச் சம்பவத்தை புதிய திருப்பம் நோக்கி எடுத்து சென்றுள்ளது.





