மேட்ரிமோனி தளத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட வாலிபர் சூர்யா, சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில்,
மேட்ரிமோனி தளத்தின் மூலம் சூர்யா என்ற வாலிபர் என்னைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். பின்னர் நேரில் சந்தித்து திருமண வாக்குறுதி அளித்து பாலியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு தலைமறைவாகிவிட்டார், என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் கார் நம்பரை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் நடத்தப்பட்டதில், அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. அண்ணாநகர் துணை ஆணையர் உதயகுமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான குழுவினர் திருநெல்வேலிக்கு சென்று 15 நாட்கள் முகாமிட்டு விருதுநகரைச் சேர்ந்த சூர்யா (25) என்பவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்துச் செல்லும் போது, அமைந்தகரை கூவம் ஆற்றின் அருகே தப்பிச் செல்ல முயன்ற சூர்யா கீழே விழுந்து இடது கால் முறிந்தது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூர்யா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக நடைபெற்ற விசாரணையில், சூர்யா மேட்ரிமோனி தளங்களில் போலி விவரங்கள் மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, திருமண வாக்குறுதி அளித்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


