சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணி இடங்களை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிய 2,708 உதவி பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய நேரடி நியமன அறிவிக்கையை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆறாம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை ரத்து செய்யப்பட்டது.
தற்போது மீண்டும் உதவி பேராசிரியருக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறிவிப்பின் போது விண்ணப்பித்தவர்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துதல் மற்றும் வயது வரம்பு ஆகியவற்றில் தளர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பாட வாரியாக உதவி பேராசிரியர்களுக்கான காலி பணியிடங்களை குறித்த விவரம் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நவம்பர் 10ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


