சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இன்று சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்துத் தீவிர ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி தலைமையில் தேர்தல்: சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஆலோசனக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தலைமை தாங்கும் எனது சகோதரர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே சந்திப்போம்” என அதிரடியாக அறிவித்தார்.
60 நிமிடங்கள்.. 80 தொகுதிகள்? இந்தச் சந்திப்பின் போது அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும், பாஜக தரப்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். முதற்கட்டமாகத் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், பாஜக தரப்பில் சுமார் 65 முதல் 80 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தை சுமூகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஃபேக்டர்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு மற்றும் அது கூட்டணியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஓபிஎஸ் – டிடிவி இணைப்பு: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சி மாற்றம்: ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே இந்த மெகா கூட்டணியின் நோக்கம் எனப் பியூஸ் கோயல் தெரிவித்தார்.


