தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
-
புதிய வாக்காளர்கள்: 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள் (அதாவது 01.01.2008-க்கு முன் பிறந்தவர்கள்) தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
-
பெயர் நீக்கம்: உயிரிழந்தவர்கள் அல்லது முகவரி மாறிச் சென்றவர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்க விண்ணப்பம் அளிக்கலாம்.
-
திருத்தங்கள்: பெயர், முகவரி, புகைப்படம் அல்லது பிறந்த தேதியில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
தேவையான படிவங்கள்: சிறப்பு முகாம்களில் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) கீழ்க்கண்ட படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்:
-
படிவம் 6: புதிய வாக்காளர் சேர்க்கைக்கு.
-
படிவம் 6B: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க.
-
படிவம் 7: பெயர் நீக்கம் செய்ய.
-
படிவம் 8: முகவரி மாற்றம் மற்றும் இதர திருத்தங்களுக்கு.
எங்கு செல்வது? பொதுவாக நீங்கள் ஓட்டுப்போடும் பள்ளிக்கூடங்கள் அல்லது அரசு அலுவலகங்களிலேயே இந்த முகாம்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் voters.eci.gov.in என்ற இணையதளத்தையோ அல்லது Voter Helpline செல்போன் செயலியையோ பயன்படுத்தலாம்.
கடைசி தேதி மற்றும் முக்கிய ஆவணங்கள்: இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜனவரி 18, 2026 வரை அவகாசம் உள்ளது. இருப்பினும், இந்த வார இறுதி முகாம்களைப் பயன்படுத்துவது எளிதானது. விண்ணப்பிக்கப் புகைப்படம், வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ்/10th Marksheet) மற்றும் முகவரிச் சான்று (ஆதார்/ரேஷன் கார்டு) ஆகியவற்றின் நகல்களை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.


