குளிர்ச்சியான காற்றினால் நம் உடலில் உள்ள ஈரப்பதம் விரைவாக உறிஞ்சப்படுவதால், கை மற்றும் கால்களில் உள்ள தோல் சுருங்கி வெடிப்பு ஏற்படுகிறது. குறிப்பாகப் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அங்கு வறட்சி அதிகமாக இருக்கும். இதோ சில எளிய தீர்வுகள்:
1. சுடுநீரைத் தவிர்த்து மிதமான நீரைப் பயன்படுத்துங்கள்: குளிராக இருக்கிறது என்பதற்காக அதிகச் சூடான நீரில் கை, கால்களைக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகச் சூடு தோலில் உள்ள இயற்கை எண்ணெய்ப் பசையை நீக்கிவிடும். எப்போதும் வெதுவெதுப்பான (Lukewarm water) நீரையே பயன்படுத்துங்கள்.
2. ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் ‘ஈரமான’ பழக்கம்: குளித்து முடித்தவுடன் அல்லது கை, கால்களைக் கழுவியவுடன் ஈரம் முழுமையாகக் காய்வதற்கு முன்பே தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவுங்கள். தோல் லேசான ஈரப்பத்தோடு இருக்கும்போது எண்ணெய் தடவினால், அது நீண்ட நேரம் தோலை மென்மையாக வைத்திருக்கும்.
3. எலுமிச்சை மற்றும் உப்பு குளியல்: வாரத்திற்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் சிறிது கல் உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து, அதில் பாதங்களை 15 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின்னர் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கி, வெடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
4. இரவு நேர ‘சாக்ஸ்’ ரகசியம்: இரவில் படுக்கப் போகும் முன் சுத்தமான பாதங்களில் வேஸலின் (Petroleum Jelly) அல்லது நெய் தடவி, மெல்லிய பருத்தி காலுறைகளை (Cotton Socks) அணிந்து கொள்ளுங்கள். இது ஒரே வாரத்தில் உங்கள் குதிகால்களை மென்மையாக்கும்.
5. ரசாயன சோப்புகளைத் தவிர்க்கவும்: அதிக மணம் மற்றும் ரசாயனம் கலந்த சோப்புகள் தோலை மேலும் வறட்சியடையச் செய்யும். அதற்குப் பதிலாகக் கடலை மாவு அல்லது பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளிப்பது கைகளுக்குப் பாதுகாப்பானது.




