நவீன கால எலக்ட்ரிக் கார்கள் (EVs) மற்றும் ஆடம்பர கார்களில் கதவு கைப்பிடிகள் வெளியத் தெரியாதவாறு (Flush Door Handles) வடிவமைக்கப்படுவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால், இந்த ‘ஸ்டைலான’ அம்சம் ஆபத்து காலங்களில் உயிருக்கு உலை வைப்பதாகக் கூறி, சீன அரசு இதற்குத் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.
தடைக்கான பின்னணி என்ன? சீனாவின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, 2027 முதல் சீனாவில் விற்பனை செய்யப்படும் அனைத்துப் பயணிகள் வாகனங்களிலும் ‘மெக்கானிக்கல் எமர்ஜென்சி ரிலீஸ்’ (Mechanical Emergency Release) வசதி கொண்ட கைப்பிடிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
விபத்து காலங்களில் சிக்கல்: கார் விபத்துக்குள்ளாகி பேட்டரி அல்லது மின்சாரம் துண்டிக்கப்படும்போது, இந்த எலக்ட்ரிக் கைப்பிடிகள் வெளியே வராமல் கதவுகளைப் பூட்டி விடுகின்றன. இதனால் மீட்புப் பணியாளர்கள் உள்ளே இருப்பவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.
உயிரிழப்புகள்: சமீபத்தில் சீனாவில் நடந்த சில விபத்துகளில், கார் தீப்பற்றியபோது கதவுகள் திறக்க முடியாததால் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
காலநிலை பாதிப்பு: கடும் குளிரில் பனி படிந்து இந்த மோட்டார்கள் ஜாம் ஆகிவிடுவது, கைகுழந்தைகளின் விரல்கள் இடையில் சிக்கிக் கொள்வது போன்ற புகார்களும் அதிகரித்துள்ளன.
குறைவான பலன், அதிக ஆபத்து: உற்பத்தியாளர்கள் இது காற்றின் வேகத்தைத் தடுத்து மைலேஜை அதிகப்படுத்தும் (Drag reduction) எனக் கூறினாலும், ஆய்வுகளின்படி இதனால் கிடைக்கும் பலன் மிக மிகக் குறைவு. ஆனால், இதன் விலை சாதாரண கைப்பிடிகளை விட 3 மடங்கு அதிகம் மற்றும் பழுதடையும் வாய்ப்பு 8 மடங்கு அதிகம் எனத் தரவுகள் கூறுகின்றன.
இந்தத் தடையால் டெஸ்லா (Tesla), பிஒய்டி (BYD), ஷாவ்மி (Xiaomi) போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது கார் வடிவமைப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.


