உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, இப்போது மக்கள் தொகை வீழ்ச்சியால் நிலைகுலைந்து போயுள்ளது. இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய சீன அரசு இப்போது ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய வரி விதிப்பு: கடந்த 32 ஆண்டுகளாகச் சீனாவில் ஆணுறை (Condoms) மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு (Contraceptive Pills) வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஜனவரி 1, 2026 முதல் இந்தச் சலுகையை ரத்து செய்துள்ள சீனா, இனி இவற்றுக்கு 13% மதிப்புக்கூட்டு வரி (VAT) விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க: மக்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அதன் மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்தலாம் என்பது சீன அரசின் கணக்கு.
பழைய கொள்கைக்கு முற்றுப்புள்ளி: 1994-ல் ‘ஒரு குழந்தை’ கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தியபோது வழங்கப்பட்ட இந்த வரி விலக்கு, இப்போது தேவையில்லை என அரசு கருதுகிறது.
சமூக அழுத்தம்: சீனாவில் தற்போது திருமண வயதான இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டாததால், இதுபோன்ற மறைமுக அழுத்தங்களை அரசு கொடுத்து வருகிறது.
மக்களின் ரியாக்ஷன்: சீன சமூக வலைதளங்களில் இந்தச் செய்திக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “ஆணுறை விலை உயர்வை விட, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவு பல மடங்கு அதிகம். வரியை உயர்த்தினால் மட்டும் மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்” என இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதே சமயம், குழந்தை பராமரிப்பு சேவைகள் மற்றும் திருமண சேவைகளுக்கு அரசு வரியைக் குறைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த ‘கண்டம் டாக்ஸ்’ (Condom Tax) பலன் தருமா அல்லது தேவையற்ற சமூகப் பிரச்சனைகளை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


