வென்றது பக்தி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றத் தடையில்லை – தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீண்ட கால சட்டப் போராட்டத்தில், இன்று பக்தர்களுக்கு ஆதரவாக மிக முக்கியமான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு உறுதி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து கடந்த முறை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பளித்திருந்தார். “வழிபாட்டு உரிமை என்பது அடிப்படை உரிமை” என்பதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஆனால், பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களைக் காட்டித் தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி: இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், “நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும்; அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறித் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான சட்டப்பூர்வமான அனுமதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெடி வெடித்துக் கொண்டாட்டம்: இந்தத் தீர்ப்பு வெளியான உடனே திருப்பரங்குன்றம் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். “முருகப் பெருமானின் அருளால் தர்மம் வென்றுள்ளது” எனப் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


