மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை ஈராக் அரசு வெளியிட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஈராக் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்த உற்பத்தி குறைப்பானது உலகச் சந்தையில் மிகப்பெரிய எண்ணெய்ப் பஞ்சத்தை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாகும் எண்ணெயைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக, இந்தியாவைப் போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயரக்கூடும். இது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.


