ICC அறிவித்த சிறந்த வீரர் பரிந்துரை பட்டியல்!! இடம்பிடித்த ஒரே இந்தியர்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

Sanju Samson nominated for ICC T20 World Cup 2026 Player of the Tournament

சஞ்சு சாம்சனின் மிரட்டலான கம்பேக்:

நடப்பு ICC T20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தனது வாழ்நாளின் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். தொடரின் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருந்த சஞ்சு, கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். குறிப்பாக, காலிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் எடுத்த 97 ரன்களும்*, அரையிறுதியில் இங்கிலாந்திற்கு எதிராகப் பறக்கவிட்ட 89 ரன்களும் இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றன. இதன் பலனாக, ICC அறிவித்துள்ள தொடர் நாயகன் விருதுக்கான 8 பேர் கொண்ட பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

பரிந்துரைப் பட்டியலில் உள்ள மற்ற வீரர்கள்:

இந்தக் கௌரவமான பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம்பிடித்துள்ள ஒரே வீரர் சஞ்சு சாம்சன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தென்னாப்பிரிக்காவின் ஐடன் மார்க்ரம் மற்றும் லுங்கி இங்கிடி, நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் செய்ஃபர்ட், இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ், பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் அமெரிக்காவின் ஷாட்லி வான் ஷால்க்விக் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். சஞ்சு சாம்சன் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 232 ரன்களைக் குவித்து, 201.73 என்ற அசுரத்தனமான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

ஞாயிறு அன்று இறுதிப்போட்டி:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த இறுதிப்போட்டியிலும் சஞ்சு தனது அதிரடியைத் தொடர்ந்தால், தொடர் நாயகன் விருதை வெல்வது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான் ரவி சாஸ்திரி உட்படப் பலரும் சஞ்சுவின் இந்த முதிர்ச்சியான ஆட்டத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram