அதிமுக கட்சியே வலுவான ஒரு கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பொழுது அந்தக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேமு திகவின் தற்போதைய நிலை என்ன? என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள குறிப்பிடத்தக்க கட்சிகளில் ஒன்று தேமுதிக. நடிகர் விஜயகாந்தால் 2005 -ல் தொடங்கப்பட்ட இந்தக்கட்சி சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
அதில் வியக்கத்தக்க வகையில் ஆரம்பித்த ஓராண்டிலேயே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றதுடன் அந்த கட்சி 8.4 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அதேபோல நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை பெற்றது.
அதன்பின்னர் 2011- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வழங்கப்பட்ட 41 இடங்களில் 29 இடங்களில் அசத்தலான வெற்றியை பெற்று வியப்பூட்டியது. மேலும் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கும் குறுகிய காலத்திலேயே உயர்ந்தது.
ஆனால் கூட்டணி வைத்த அதிமுக கட்சியுடன் மோதல் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து உண்மையான எதிர்க்கட்சியாகவே தேமுதிக மாறியது. இதனால் அடுத்தடுத்து அந்தக்கட்சி தேர்தல்களில் பின்னடைவையே சந்தித்து வந்தது.
2014 -ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் வாக்கு சதவீதமும் வெகுவாக குறைந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2016- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலாகட்டும் 2019- இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலாகட்டும் இரண்டிலும் தேமுதிக தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் வாக்கு சதவீதமும் மளமளவென குறைந்தது.
தொடர்ந்து படுதோல்விகளையே சந்தித்து வந்த தேமுதிக 2021 -ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த அளவிற்கு தொகுதிகள் கிடைக்காததால் டிடிவி தினகரன் கட்சியில் சேர்ந்து 60 தொகுதியில் களமிறங்கியது. ஆனால் அதிலும் அந்தக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதோடு வாக்கு சதவீதமும் 0.48 என்ற அளவில் கீழ்மட்ட நிலைக்கு சென்றது.
இந்த சூழ்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2023- ஆம் ஆண்டு மரணம் அடைந்ததும் அவரது மகன் விஜயபிரபாகரன் தலைமையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேர்ந்து 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.
தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வந்தாலும் அந்த கட்சியின் கொடிநாள் விழாவின் போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என கட்சியின் தலைமை முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதை பற்றி கேள்வி எழுப்பிய போது அப்படி எதுவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என பதில் அளித்தார்.
இப்படி எடப்பாடி திடீரென கைவிரித்து விட்டதால் அதிர்ச்சி அடைந்த தேமுதிகவினர் விஜயகாந்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் சத்தியம் வெல்லும் நாளை நமதே என பதிவிடப்பட்டு சற்று நேரத்தில் அது நீக்கமும் செய்யப்பட்டது.
தேமுதிகவின் அறிவிப்பு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு அளித்த பதில் போன்றவற்றால் தேமுதிக இனியும் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா? அதன் அடுத்த கட்ட நகர்வு என்ன? போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் தற்போது எழுந்து வருகின்றது.
இது பற்றி பேசிய தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த கருத்து பற்றி அந்தக்கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட போது ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு கூறியிருப்பதால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேமுதிகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு பற்றி தெரியப்படுத்தப்படும் என்று கூறினார்.





