சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூரின் முக்கியப் போக்குவரத்து மையமான உக்கடம் பகுதியில் உள்ள ஆட்டோ எல்பிஜி (LPG) கேஸ் பங்க், கையிருப்பு தீர்ந்ததால் இன்று அதிரடியாக மூடப்பட்டுள்ளது. இதனால் அதிகாலையிலேயே கேஸ் நிரப்ப வந்த நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் மற்றும் எல்பிஜி கார்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. “எரிபொருள் தீர்ந்துவிட்டதால் டேங்கர் லாரிகள் வந்த பிறகுதான் விநியோகம் தொடங்கும்” எனப் பங்க் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் ஓட்டுநர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்றால், பல ஓட்டுநர்கள் தங்களது காலி சிலிண்டர்களைச் சுமந்துகொண்டு அடுத்தடுத்த பங்க்குகளுக்கு அலைந்து திரியும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உக்கடம் மட்டுமின்றி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை என நகரின் மற்ற பகுதிகளிலும் இதே போன்ற தட்டுப்பாடு நிலவி வருகிறது. “ஏற்கனவே சவாரி குறைந்துள்ள நிலையில், இப்போது கேஸ் தட்டுப்பாடும் வந்திருப்பதால் எங்கள் பிழைப்பு கேள்விக்குறியாகிவிட்டது” என ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் கப்பல்கள் வராததால், சென்னை போன்ற நகரங்களிலிருந்து கோவைக்கு வர வேண்டிய டேங்கர் லாரிகள் இன்னும் புறப்படக்கூட இல்லை எனத் தெரிகிறது. இதனால் இன்னும் சில நாட்களுக்கு இந்தத் தட்டுப்பாடு நீடிக்க வாய்ப்புள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லும் பொதுமக்களும் ஆட்டோக்கள் கிடைக்காமல் உக்கடம் பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அவசரத் தேவைக்கான எரிபொருளை விநியோகிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


