தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புக்கெட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஒரு மிகப்பெரிய விமான விபத்து நேரிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 133 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புக்கெட் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஓடுபாதையில் (Runway) விமானம் தரையைத் தொட்டபோது, எதிர்பாராத விதமாகப் பலமான சத்தத்துடன் மோதியது. இந்த அதிர்ச்சியில் விமானத்தின் முன் சக்கரம் (Nose Landing Gear) திடீரெனக் கழன்று தனியாக ஓடியது. இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையின் ஓரத்தில் சரிந்து நின்றது. விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர்.
இருப்பினும், விமானியின் சாதுர்யமான செயல்பாட்டினாலும், அதிர்ஷ்டவசத்தினாலும் விமானம் தீப்பிடிக்காமல் தடுத்த நிறுத்தப்பட்டது. விமானத்தில் பயணித்த 133 பயணிகளும் மற்றும் ஊழியர்களும் எவ்விதக் காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர். விபத்து நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவசரக்கால வழிகள் வழியாகப் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்தச் சம்பவத்தால் புக்கெட் விமான நிலையத்தில் மற்ற விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது தரையிறங்கும் போது ஏற்பட்ட அழுத்தத்தால் சக்கரம் கழன்றதா என்பது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் தாய்லாந்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே எரிபொருள் விலையேற்றம் மற்றும் போர்ச் சூழலால் விமான நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், இந்த விபத்து ஏர் இந்தியா பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.


