Indian Oil Corporation நிறுவனத்தின் சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 77189 55555 என்ற தொலைபேசி எண் சில நாட்களாக செயல்படாததால், பல இடங்களில் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த எண்ணுக்கு அழைத்தபோது “இந்த எண் தற்காலிகமாக செயல்பாட்டில் இல்லை” என்ற தகவல் கிடைப்பதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலர் நேரடியாக கேஸ் ஏஜென்சி அலுவலகங்களுக்கு சென்று முன்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் அலுவலகங்களின் முன்பு நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன.
இதற்கிடையில் எல்பிஜி பற்றாக்குறை குறித்த தகவல்கள் மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளன. ஈரான் நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட தாக்குதல்கள் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் போது முதலில் எல்பிஜி, அதன் பின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்றவை பெறப்படுவதால் சுத்திகரிப்பு செயல்முறையில் ஏற்பட்ட பாதிப்பு எரிவாயு விநியோகத்தையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.ஆனால் எல்பிஜி பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேவையற்ற பதற்றம் வேண்டாம் என்றும் அரசு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் IndianOil ONE செயலியை பதிவிறக்கம் செய்து, கேஸ் இணைப்பில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் மூலம் login செய்து “Refill” தேர்வு செய்து சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இதில் டீலர் பெயர், இணைப்பு எண், முன்பதிவு நிலை போன்ற விவரங்களும் தெரியும். மேலும் 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60 உயர்த்தப்பட்டுள்ளதுடன், காத்திருப்பு காலமும் 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


