விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற 62 வயதான அம்புஜம் என்ற மூதாட்டி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்தினர்.
மூதாட்டி சென்ற வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது லோகாம்பாள் மற்றும் அவரது 17 வயது மகள், அம்புஜத்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், திருமண மண்டபத்தில் இறக்கிவிடுவதாக கூறி மூதாட்டியை நம்பவைத்து பைக்கில் ஏற்றிச் சென்றதாகவும், பின்னர் புலிக்குறிச்சி அருகேயுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அவர் அணிந்திருந்த நகைகளை பறிக்க திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. அங்கு மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை காட்டுப்பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், குற்றச்செயலில் ஈடுபட்ட தாய் மற்றும் மகளிடமிருந்து 4 சவரன் தங்க நகைகள் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டு மேலான விசாரணை நடைபெற்று வருகிறது. உதவி செய்வது போல நடித்து, நம்பிக்கை பெற்று, பின்னர் நகைக்காக கொலை செய்த இந்த சம்பவம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


